சென்னை கெல்லிஸ் சந்திப்பில் ஏப். 18ஆம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விக்னேஷ் (25) ஏப். 19ஆம் தேதி மர்மமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விக்னேஷின் குடும்பத்தார் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
காவல்துறையினர் ஏன் பணம் தர வேண்டும்?:இந்த விவகாரம் குறித்து விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத் கூறுகையில், "என் தம்பியின் மரணத்தை மறைக்க, ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ், பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் என்னையும் எனது தம்பிகளையும் காரில் அழைத்துச் சென்று பணம் கொடுத்தனர். பேரம் பேசி மெரினாவில் கடை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்" என்றார். அப்போது அவர்கள் கொடுத்த பணத்தையும் செய்தியாளருக்கு காண்பித்தார்.
சிசிடிவி காட்சிகளைப் பார்க்கவேண்டும்:இதையடுத்து போலீசார் விக்னேஷை தாக்குவதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு கூறுகையில், "சம்பவம் நாளன்று எனது ஆட்டோவில் விக்னேஷும், சுரேஷும் வந்தனர். போலீசார் அவர்களை கெல்லிஸ் சாலையில் விசாரிக்கும்போதே உருட்டுக்கட்டையால் தாக்கினர். அப்பகுதி சிசிடிவி பதிவுகளை எடுத்துப் பார்த்தாலே உண்மை தெரியவரும்.