தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பால்வளத்துறையிடம் கோரிக்கை! - பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்

ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனையாவதைத் தடுக்க மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கும் விலையிலேயே பால் முகவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்,
AAVIN MONTHLY DELIVERY

By

Published : Jun 5, 2021, 6:30 AM IST

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கவலையில் நாங்கள்

"ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு, நிர்ணயிக்கப்பட்ட விலையான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு (MRP) மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்யும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடர்ந்து தெரிவித்து வருவது, சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களை உள்ளபடியே கவலை கொள்ளச்செய்கிறது.

வருமானம் எட்டாக்கனிதான்

ஏனெனில், எந்த ஒரு தொழில் ஆனாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் அல்லது வருமானம் கிடைத்தாக வேண்டும். ஆனால், சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்திலும், வணிகத்திலும் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கு மட்டும் சுமார் 20ஆண்டுகளுக்கு மேலாக உழைப்பிற்கேற்ற வருமானம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை C/F, WSD என்கிற இடைத்தரகர்களை கடந்து பால் முகவர்களுக்கு வெறும் 50 காசுகள் தான் கிடைக்கிறது.

இதன் காரணமாகவே தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்கின்ற நிலை, கடந்த 20ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

தனியார் வேறு.. ஆவின் வேறு..

அதே சமயம் தனியார் பால் நிறுவனங்கள், பால் முகவர்களோடு நேரடி வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை நியாயமான அளவில் வழங்கி வருகின்றனர்.

இதனால், எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையான அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதில்லை.

ஒரே வழி

எனவே, ஆவின் பால் அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனையாவதையும், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டுமானால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஒரு விலை, பால் முகவர்கள் விற்பனை செய்யும் பாலுக்கு ஒரு விலை என இருப்பதை மாற்ற வேண்டும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே பால் முகவர்களுக்கும் ஆவின் பாலினை விநியோகம் செய்ய அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

முடிவை கைவிடவும்

அதுமட்டுமின்றி சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பால் விநியோகத்திற்கான செலவினங்களைக் கணக்கிட்டு விற்பனை செய்து வருவதால்தான், நிர்ணயிக்கப்பட்ட விலையான அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்ய நேரிடுகிறது.

எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஆவின் பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் பால் முகவர்களின் உரிமம் ரத்து செய்வதை உடனடியாக கைவிட வேண்டும். இதுவரை உரிமம் ரத்து செய்யப்பட்ட பால் முகவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கத்தையும் சீண்டிப் பார்த்த கரோனா!

ABOUT THE AUTHOR

...view details