தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து’

சென்னை: சமையல் எரிவாயு உருளை டெலிவரி செய்யக் கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

cylinder
cylinder

By

Published : Mar 18, 2020, 4:38 PM IST

சமையல் எரிவாயு உருளைகள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வினியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், சமையல் எரிவாயு உருளை டெலிவரி செய்வதற்காக, வினியோக நிறுவனங்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகிறது எனவும், இந்தத் தொகையை, உருளைகளை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், வினியோக முகவர்கள் எடுத்துக் கொண்டு, டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், சமையல் எரிவாயு வினியோக உரிமை ஒப்பந்தம் செய்யும் போதே, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனத்திற்கு வழங்கப்படும் கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 21 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும்படி நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிவாயு உருளை டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், எண்ணெய் நிறுவனங்களிடம் புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வினியோகஸ்தர்கள் சேவையில் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் தங்கள் சமையல் எரிவாயு இணைப்பை வேறு நிறுவனத்திற்கும், வேறு வினியோகஸ்தர்களுக்கும் மாற்றிக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்த பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தமிழ்நாடு எல்பிஜி எரிவாயு உருளை டெலிவரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சம்: அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details