சென்னை: வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் புயலுக்கு ‛நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை மறுநாள், அதாவது நவம்பர் 25ஆம் தேதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 முதல் 120 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.