தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கஜா கடந்து ஓராண்டு முடிந்தது.... மீண்டதா சோழநாடு? - டெல்டா மாவட்டங்கள்

மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம்.

கஜா

By

Published : Nov 15, 2019, 10:40 AM IST

கடந்த வருடம் இதே தேதி இந்நேரம் அந்த புயல் கரையை கடந்துவிட்டது. சோறுடைத்த சோழநாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் கஜா என்னும் அரக்க புயல் தனது அசுரக் கரங்களால் அலசிப் போட்டுவிட்டது. வயல்வெளிகள், தென்னந் தோப்புகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. கால்நடைகள் கொத்துக் கொத்தாக சரிந்து விழ, வீட்டு ரேஷன் கார்டில் பெயர் மட்டும் சேர்க்காத அந்த கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க டெல்டாவில் அப்போது நிகழ்ந்தது ஒரு போர்க்கால காட்சி. டெல்டாவில் பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பான்மை.

உறவினர்களைப் பிரிந்து வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், வெளியூர்களிலும் இருந்த குடும்பத்தினர் மனதுக்குள் நிகழ்ந்த பரிதவிப்பை எழுத்திற்குள் அடக்கிவிட முடியாது. ஆம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களில் அதிகம்பேர் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களது சம்பாத்தியத்தில்தான் நிலமோ, டிராக்டரோ, லாரியோ வாங்கி தங்களது நாட்களையும், வாழ்க்கையையோ நகர்த்தி கொண்டிருப்பவர்கள் டெல்டாக்காரர்கள். கிட்டத்தட்ட ஒரு தலைமுறையின் உழைப்பை கால் நூற்றாண்டுக்கு பின்னுக்கு இழுத்து சென்றது கஜா புயல். அதிலிருந்து எப்படி மீளப் போகிறோம் என பரிதவித்து நின்றார்கள் (நிற்கிறார்கள்) வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களும், உள்ளூரில் அகதியாய் இருந்தவர்களும்.

கஜா புயல்

ஆம், மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம். அரசு நிவாரணம் செய்தது. தமிழ்நாடெங்கிலிருந்தும் நிவாரண பொருட்கள் குவிந்தன. ஆனாலும் மக்கள் பரிதவித்து நின்றார்கள். சோற்றுக்கு அலைந்தார்கள். உயிரற்றுக் கிடக்கும் கால்நடைகளை கண்டு கதறினார்கள். வீட்டை இழந்து வெறித்து நின்றார்கள். டெல்டா மாவட்டங்களில் உள்ளடங்கிய பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் அதிகம்.

கஜாவின் கோர தாண்டவம்

ஒவ்வொரு கிராமத்திற்கும் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தளவு ஓடி ஓடி உழைத்தார்கள். ஆனால் அரசு தரப்பிலிருந்து முறையான நிவாரணம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் எழ, இல்லை, இல்லை அரசு சரியாக செய்துகொண்டிருக்கிறது சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தன. ஆனால், தங்களுக்கு அரசு தரப்பிலிருந்து முழுமையான எந்த உதவியும் வரவில்லை என்று மக்கள் கூறியதுதான் கள நிலவரம்.

கஜா

தான் ஒரு விவசாயி என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சரே கஜா புயல் பாதிப்பை காண்பதற்கு ஹெலிகாப்டரில்தானே சென்றார். பல அமைச்சர்கள் மக்களின் கோபத்திற்கு ஆளானார்கள். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ். மணியனின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. மக்களை எதிர்கொள்ள முடியாமல் பைக்கில் பறந்தார் அமைச்சர். அவரை மக்கள் மடக்கி பிடித்து கேள்வி மேல் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பதில் சொல்ல முடியாமல் திணறினார் மணியன். அரசு தரப்பிலிருந்து முழுமையான உதவி சென்றிருந்தால் மக்கள் ஏன் கோபப்பட போகிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசு நிர்வாகத்திடமோ, பாராட்டு பத்திரம் வாசித்தவர்களிடமோ அந்த கேள்விக்கு பதிலில்லை.

பைக்கில் பறக்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டது என்று மட்டும் அதை கடந்து சென்றுவிட முடியாது. கஜா ஒரு தலைமுறையின் உழைப்பை, கனவை நிர்மூலமாக்கி இருக்கிறது. விவசாயிகளையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் அடையாளம் தெரியாத அளவு சிதைத்துச் சென்றிருக்கிறது.

கஜா புயலால் உயிரிழந்த உயிரினங்கள்

இயற்கை நிகழ்த்தும் பேரிடரை எதிர்த்து எந்த அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாதுதான். இயற்கை அனைத்திற்கும், அனைவருக்கும் மீறியது. ஆனால் இயற்கைப் பேரிடருக்கு பிறகு அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கலாம். கஜா புயல் பாதிப்பிலிருந்து மீள 15,000 கோடி ரூபாய் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் முதலமைச்சர். முதற்கட்டமாக மத்திய அரசு 353 கோடி ரூபாயை ஒதுக்கி அதற்கு பிறகு 1,146 கோடியை ஒதுக்கியது. கால் நூற்றாண்டு பின்னுக்கு இழுத்து சென்று கஜா ஆடிய ருத்ரதாண்டவத்தை சரிகட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்பது இரண்டு குதிரைகளைச் சாப்பிடும் அளவு பசி உள்ளவனுக்கு இரண்டு ரொட்டித் துண்டை கொடுப்பதற்கு சமம்.

மோடி, எடப்பாடி

கஜா புயல் நிவாரண பணிக்காக ரூ 2,395 கோடி என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழப்புகள், கால்நடைகள் பலி, வாழ்வாதார இழப்பு, உடமைகள் இழப்புக்காக ரூ 591.66 கோடி, வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ 401.49 கோடி, பயிர் சேதத்துக்காக ரூ 775 கோடி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சேதத்துக்கு ரூ 89 கோடி என மொத்தம் 2,395 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கஜா புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் கட்டித்தர தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

நிதி ஒதுக்கப்பட்டது, டெல்டா மாவட்டங்கள் மீட்கப்படும் என அரசு சத்தியம் செய்தது. ஆனால் இதுவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் உதவிகள் சென்று சேர்ந்ததா என்ற கேள்விக்கு பதிலில்லை. கேள்வியை யாரும் கேட்பதுமில்லை. வீட்டினை இழந்தவர்களுக்கு ரூ 10,000 கொடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்டு அந்த பணமும் கொடுத்தாகிவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், அந்த 10,000 ரூபாயால், வீட்டுக்கு பின்புறம் அமைந்திருக்கும் மாட்டுக் கொட்டகையைக்கூட தங்களால் சீரமைக்க முடியாது என மக்கள் பரிதவிக்கின்றனர்.

அதேபோல், புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கும், சென்றவர்களுக்கும் தெரியும் அங்கு முந்திரி பருப்பு அங்கு இருக்கும் கிராம மக்களுக்கு எவ்வளவு முக்கியமான வாழ்வாதாரம் என. ஆனால், கஜாவால் முறிந்து விழுந்த முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக கூறிவிட்டு அலுவலர்கள் சென்றது சென்றதுதான். இன்னும் இழப்பீடும் வரவில்லை, அலுவலர்களும் வரவில்லை என்கின்றனர் மக்கள். முந்திரியின் கதிதான், தென்னை, தேக்கு, சவுக்கு போன்றவைகளுக்கும். அவலத்தின் உச்சமாக, கடந்த ஆண்டு கஜா புயலால் கூரையை இழந்த வீடுகளுக்கு தற்போதுதான் தார் பாய் கொடுத்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் மக்கள்.

முக்கியமாக, ஒரத்தநாடு அருகே இருக்கும் ஒக்கநாடு மேலையூரில் கஜா புயலின்போது போன மின்சாரம் ஓராண்டாகியும் வரவில்லை. நவீன காலம், நவீன இந்தியா என்று பிதற்றிக்கொண்டிருக்கும் இதே தேசத்தில்தான் ஒரு ஊர் ஒரு வருடமாக கற்கால வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கஜாவால் சேதமடைந்த வீடு

விராலிமலையில் இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2,500 வீடுகள் தயாராக உள்ளதாகக் கூறினார். தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கூறுகிறார் என்றால் இதுவரை அவர்களுக்கு வீடு சென்று சேரவில்லையா என்ற கேள்வி எழுகிறது. மேற்கூறியது போல் டெல்டா மாவட்டங்களில் உள்ளடங்கிய கிராமங்கள் அதிகம். தாமதமாகவே வேலைகள் நடக்கும் என்று வாதம் வைத்தாலும் அதற்காக கடந்த ஆண்டு கூரை பிய்ந்த வீடுகளுக்கு இப்போது தார் பாய் கொடுக்கும் அளவுக்கா தாமதம்? இந்த வேகத்தில் சென்றால் கால் நூற்றாண்டு பின்னுக்கு சென்ற டெல்டா மீள இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படும்.

கஜாவில் காலியான தென்னந்தோப்பு

கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழ்நாடு முழுவதுமிலிருந்து வந்த நிவாரணப் பொருட்கள் நாகப்பட்டினம் உணவு பொருள் வாணிப கிடங்கிலிருந்து அள்ளி செல்லப்பட்டு தனக்கு வேண்டியவர்களிடம் அந்த உணவு கிடங்கு மேலாளர் மோகன் கொடுத்ததாக அப்பகுதி மக்கள் கடந்த மே மாதம் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன,

1. கஜா புயலின் தாக்கத்தினால் மக்கள் உணவுக்கு அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்படி இருக்க நிவாரண பொருட்கள் எப்படி தேங்கி போயின? அப்போது, நிவாரண பொருட்கள் அந்த சமயத்தில் மக்களுக்கு சரிவர போய் சேரவில்லையா?

2. உண்மையாகவே நிவாரண பொருட்கள் தேங்கிவிட்டதாகவே வைத்துக்கொண்டாலும் அதன் காலாவதி தேதி ஒருவேளை முடிந்திருந்தால் அதை அழிக்கத்தானே வேண்டும். பிறகு ஏன் அவர் அதனை மற்றவர்களுக்கு கொடுக்கிறார்?

கஜா

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கஜா புயலின் தாக்கத்தினால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஓராண்டு காலத்தில் அரசு அறிவித்த அனைத்து நிவாரணங்களில் முக்கால்வாசியாவது சென்று சேர்ந்திருக்கிறதா? இதற்கு அரசு தரப்பிலிருந்து ஒரு விளக்கம் கிடைக்குமா... கஜா புயல் நிவாரணத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டது என பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்புவார்களா என்றும் மக்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

இந்த ஓராண்டுக்குள் மக்களுக்கு இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன. அவர்களுக்கு எழுந்திருக்கும் கேள்விகளில் மிக மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், கஜா கடந்து ஓராண்டாகிவிட்டது மீண்டதா சோறுடைத்த சோழநாடு என்பதுதான். இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அரசு மௌனமாக இருக்க, கேள்வி கேட்க வேண்டிய ஊடகமும் அமைதியாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

ABOUT THE AUTHOR

...view details