தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் (நாளை மாலை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும். இதன்காரணமாக இன்று(டிச.04) கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், புதுவை, கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளையும் (டிச. 5) நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.