சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த சென்னையை சேர்ந்த பாலமுருகன் (30), அழகர்சாமி(42), அப்துல் மாலிக்(50), குமார்(43), அன்பரசன்(31), சசிகுமார் (32), காளிமுத்து(45), பாலாஜி(28) ஆகிய எட்டு பேரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசிய ரிங்கிட் ஆகிய கரன்சிகளை கண்டுபிடித்தனர். எட்டு பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினார்கள்.