சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையை ஆதிலட்சுமி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவரையும், அவரது மகனையும் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவலர்கள் பிரவீன் குமார், அனுராதா ஆகியோர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆதிலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இப்புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பிரச்னையில், ஆதிலட்சுமிக்கு தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஆதிலட்சுமியை அழைத்துச் செல்லும் போது பெண் காவலர்களை வைத்து அழைத்து செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.