காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி நீர் மூலம் சாகுபடி செய்யப்பட உள்ள டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் உணவு களஞ்சியமான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் மற்றும் செப்பனிடும் பணிகள் பெருமளவிலும், ஏனைய மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன.
கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்ல கடந்த ஆண்டு சுமார் 60 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில், 2629.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு செப்பனிடும் பணிகள் நடைபெற்றன. இது டெல்டா விவசாயிகள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.