தற்போது உலகம் முழுவதும் இணையதள பணப் பரிவர்த்தனை என்பது எளிதாக நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கு அடுத்த கட்டமாக இணையதளத்தில் கிரிப்டோகரன்சி குறித்து தேடுதலும், அதில் வைப்புத்தொகையை இடுவதிலும் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பது குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் நம்மிடம் உரையாடினார். அவர் உடனான சிறப்பு நேர்காணலைக் காணலாம்.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
”கிரிப்டோகரன்சி என்பது கையில் எடுத்து செலவு செய்கின்ற பணம் போன்றது அல்ல. அது இணையதள பணம் (Digital money). இந்தப் பணம் என்பது யாரிடம் இருந்து வருவது என்றும் தெரியாது; யாருக்குப் போகிறது என்றும் தெரியாது. அரசு இதனை கட்டுப்படுத்தக் கூடாது, இதற்காகவே ’கிரிப்டோகரன்சி’ உருவாக்கப்பட்டது.
யாருக்காக அனுப்பப்படுகிறது, பெறப்படுகிறது என்பதை மறைக்க ரகசியக் குழுக்களால் உருவாக்கப்பட்டது கிரிப்டோகரன்சி ஆகும். இதை ஒரு சமூகத்தில் கொண்டு வருகிறீர்கள் என்றால், ஒரு நாடு அங்கீகரிக்கிறது என்றால் ஒரு பரிசோதனை அடிப்படையில் தான் நடைபெறும்.
ஏனெனில், ஒரு அரசாங்கத்தால் கிரிப்டோகரன்சியை கட்டுபடுத்த முடியாது. அதன் விலை ஏற்ற இறக்கத்தை, தடை செய்ய முடியாது. அதனை யார் பயன்படுத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியாது. இதற்காக வரி ஏற்படுத்த முடியாது. இதனால் நாடுகள் கிரிப்டோகரன்சியை அங்கீகரிப்பது மிகக் குறைவு. இது முழுக்க முழுக்க இணையத்தில் உருவாக்கக்கூடிய, டார்க் நைட்டில் நடக்கிற டிஜிட்டல் பண வர்த்தகமாகும்.
கிரிப்டோகரன்சியை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்
கிரிப்டோகரென்சி பணத்தை போதை மருந்து விற்பவர்கள், குழந்தைகளை வைத்து தவறாக படம் எடுப்பவர்கள், நிழல் உலக ஆசாமிகள், பயங்கரவாதிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றம் செயலிக்கு விதித்திருந்த தடையை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. செயலி வழக்கம் போல் செயல்பட அனுமதியுள்ளது.
வரி ஏய்ப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்
கிரிப்டோகரன்சி இன்று உலகம் முழுவதும் நூற்றுகணக்காக காணப்படுகிறது. அதில் முக்கியமான ஐந்து கிரிப்டோகரன்சிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- பிட்காயின்- ரூ. 47,97,000
- ஈதரியம்- ரூ. 3,41,000
- பினான்ஸ் காயின்- ரூ. 43,429
- ரிப்பிள் (எக்ஸ்.ஆர்.பி) - ரூ. 88
- டெதர் - ரூ. 74
இவ்வாறாக பல்வேறு கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கிரிப்டோகரன்சி வாங்கி வைப்பதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யலாம். மேலும் கிரிப்டோகரன்சி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 35,000 டாலருக்கு வாங்கிய ஒரு கரன்சி, வருகின்ற காலங்களில் 3500 டாலராக சரிவைக் காணலாம்.
அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்ன் கிரிப்டோகரன்சி மூலம் டெஸ்லா கார் வாங்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், சீன அரசு கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை செய்துள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் இதனை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகிறது. ஆனால், உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஹேக்கர் கையில் சிக்கினால் அவ்வளவுதான்
கிரிப்டோகரன்சியை எளிதாக ஹேக்கர்கள் ஹேக் செய்து வெளி நபர்களிடம் இருந்து கரன்சியை எடுத்துக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இணையதளம் மூலமே நடப்பதால் ஹேக் செய்வது சுலபமாகும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஐந்து கிரிப்டோகரன்சிகள் ஹேக் செய்யப்பட்டதாக புகார் வந்திருந்தது.
நாட்டின் பொருளாதாரம் உயர வாய்ப்பில்லை
கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்தைத் தகர்க்குமே தவிர நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு சாத்தியமில்லை. மேலும், கிரிப்டோகரன்சியை உருவாக்கும் தனியார் செயலி நிறுவனத்துக்கு மட்டுமே லாபம் கிடைக்கும்.