சென்னை: தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவருகிறது.
இதுவரை கரோனா மூன்றாம் அலையில் தொற்றால் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் காவல்துறையினர் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கும் தொற்று
கடந்த 3 அலைகளைச் சேர்த்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளான காவல்துறையின் எண்ணிக்கை 150யைத் தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிப்பிற்குள்ளான காவல் துறையினர் பலர் வீட்டுத் தனிமையிலும், இணை நோய் உள்ள தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிநபர் முழுகவச உடைகள்
சென்னையில் ஜன.20ஆம் தேதியான இன்று சி.ஆர்.பி.எஃப் சார்பில் மறு பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பிரத்தியகமாகத் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தனிநபர் முழு கவச உடைகள் (PPE Kit) எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தனிநபர் முழு கவச உடைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் சி.ஆர்.பி.எஃப் அதிவிரைவுப் படையின் 97ஆவது பட்டாலியன் கமாண்டண்ட் எரிக் கில்பர்ட் ஜோஸ் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு வழங்கினார். அவற்றை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் பயன்படுத்தம் வகையில் எளிமையாக இருந்தன.
பலமுறை பயன்தரும்
முதற்கட்டமாக 40 கவச உடைகளை சி.ஆர்.பி.எஃப் அதிவிரைவுப் படையின் 97ஆவது பட்டாலியன் கமாண்டர் எரிக் கில்பர்ட் ஜோஸ், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு வழங்கினார்.
பின்னர் பேசிய சி.ஆர்.பி.எஃப் கமாண்டர் எரிக் கில்பர்ட் ஜோஸ், பாராஷூட் தயாரிக்கும் பொருட்கள் மூலம் இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கவச உடையின் விலை 9 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார். அவற்றை 100 அல்லது 200 முறைக்கும் மேல் கூட துவைத்து மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
காவல்துறையினருக்கு கவுன்சிலிங்
தொடர்ச்சியாக பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நந்தம்பாக்கத்தில் காவல்துறையினருக்கென கரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங், சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது சி.ஆர்.பி.எஃப் மூலம் முதற்கட்டமாக 40 பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முழு பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து வழங்கவும் வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஹரிநாடார் பற்றி பேசியபோது, நடிகை விஜய லட்சுமி தற்கொலை முயற்சி விவகாரத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் ஹரி நாடார் மற்றும் சதா ஆகிய இருவர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ஹரி நாடார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலை சுற்றும் கேட்டால்... பங்குகளாக சொத்துகள் குவித்த முன்னாள் அமைச்சர்