தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை - நீதிமன்றம் வேதனை

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற செய்திகள்
நீதிமன்ற செய்திகள்

By

Published : Oct 23, 2021, 2:22 PM IST

சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உலக பேச்சுத்திறன் குறைபாடு விழிப்புணர்வு - கவனமுடன் கையாண்டால் சிறுவயதிலேயே சரிசெய்யலாம்!

ABOUT THE AUTHOR

...view details