சென்னை மாங்காட்டை அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் (55). வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த அவர் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் கால் முறிந்து வீட்டில் ஓய்விலிருந்து வருகிறார். அவருக்கு வடபழனியில் உள்ள தனியார் வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜுக்கு வங்கியிலிருந்து பேசுவதாகஅழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சிலர் உங்கள் கிரெடிட் கார்டு பிளாக் செய்துவிட்டு புதிய கார்டு கொடுப்பதாகக் கூறி வங்கிக் கணக்கின் தகவல்கள், ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றைப் பெற்றுள்ளனர்.
பின்னர் திடீரென அவரது கணக்கிலிருந்து அடுத்தடுத்து ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.30 ஆயிரம் என மொத்தம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கிரெடிட் கார்டு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதனைக் கண்டு கொள்ளாமல்விட்ட அவருக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து அழைப்பு வந்துள்ளது.
அதனால் அதிர்ச்சியடைந்த இருதயராஜ் காவல் துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இருதயராஜ் செல்போனுக்கு வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், இருதயராஜுக்கு தெரியாமல் அவரது பெயரிலிருந்த கிரெடிட் கார்டை பிளாக் செய்துவிட்டு புதிதாக கார்டு வாங்கி இருப்பதும், அதனை கோயம்பேட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர் செய்ததும் தெரியவந்தது.
அதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "சாப்ட்வேர் என்ஜினீயரான கார்த்திகேயன் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களை தீர்க்கும் கஸ்டமர் கேர் (customer care) பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அதன்மூலம் கிரெடிட் கார்டில் அதிக தொகைப் பயன்படுத்தும் நபர்கள் குறித்து தகவல் சேகரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. குறிப்பாக இருதயராஜ் வழக்கில், அவரது கிரெடிட் கார்ட்டை முதலில் பிளாக் செய்துவிட்டு புதிதாக ஒரு கிரெடிட் கார்டுக்கு வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.