இதுதொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு மூன்று நாள்களே உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது உள்நோக்கம் கொண்டது.
மத்தியிலுள்ள மோடி அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் தன்னுடைய அரசியல் நலனுக்காக பயன்படுத்தி வருகிறது. மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீது, வருமானவரித்துறையை ஏவிவிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமானவரி சோதனை, மக்களுடைய கவனத்தை திசை திருப்பவும், எதிர்கட்சிகளின் மீது களங்கம் கற்பிக்கவும் மட்டுமே நடத்தப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் திமுக தலைமையிலான அணியின் வெற்றியைத் தடுத்து விட முடியும் என்று மத்திய பாஜக அரசு கருதுமானால், அது பகல் கனவாகவே முடியும்.