தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள், தோழர் சங்கரய்யாவின் மூதாதையர்கள்.
இந்நிலையில் கோவில்பட்டியில் 1922ஆம் ஆண்டு ஜூலை 15-இல் பிறந்த மகனுக்கு பிரதாப சந்திரன் என்று பெயர் சூட்டினார் நரசிம்மலு.
ஆனால் நரசிம்மலுவின் அப்பா எல்.சங்கரய்யா தனது பெயரை பேரனுக்கு வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், பிரதாப சந்திரன் என்ற பெயர் சங்கரய்யாவாக மாறியது.
சங்கரய்யாவின் நாற்றாங்கால்
மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாறு பாடத்தை விருப்பமாகத் தேர்வு செய்து 1939இல் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அதே கல்லூரியில் பி.ஏ. கடைசி ஆண்டு வரை படித்தார். இறுதித்தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதானார்.
படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது. சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைப் பறவை
வேலூர் சிறையில்தான் சங்கரய்யாவிற்கு காமராஜர் உள்ளிட்டத் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. சிறைக் கொடுமைகளுக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதனால் 1941ஆம் ஆண்டு ஜூலையில் ராஜமகேந்திரபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார்.
மற்றவர்கள், விடுதலை செய்யப்படுகிறார்கள். காமராஜர் பிரதமச் செயலாளருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியதன் பேரில் மீண்டும் வேலூர் சிறைக்கு மீண்டும் மாற்றப்படுகிறார். 1942 ஜூன் வரை சிறையிலிருந்து பிறகு விடுதலை செய்யப்படுகிறார்.
இளம்பிராயத்தில் தோழர் சங்கரய்யா திராவிட இயக்கத் தாக்கம்
அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக செயல்பட்ட தோழர் சங்கரய்யா, சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். 1938-இல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, அன்றைய முதலமைச்சர் ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டினார்.
1939இல் மதுரையில் ஒடுக்கப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
திரைமறைவு
1948 மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றார். அதன்பின், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கரய்யா தலைமறைவாக தமிழ்நாடு திரும்பினார். 1948 முதல் 1951 வரை தலைமறைவாகவே சங்கரய்யா செயல்பட்டார்.
ஒரு சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். இதனால், தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலையில் அவர் இருந்துள்ளார்.
மூன்று முறை எம்எல்ஏ
இதன்பின்னர், பல மக்கள் போராட்டங்களில் சங்கரய்யா பங்கேற்று வந்த நிலையில், பின்னர் அவர் வாக்கரசியலை நோக்கி நகரத் தொடங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்த 1967இல் அதன் கூட்டணிக் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அத்தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியிலிருந்தும், மதுரை கிழக்குத் தொகுதியில் 1977, 1980 ஆகிய ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காலத்தின் தேவை
பட்டப்படிப்பையே நிறைவு செய்யாத சங்கரய்யா ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஜனசக்தி பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். 1963இல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966இல் தீக்கதிர் மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.
100 வயதைத் தொட்டும் ஓர் இளைஞன் போல் இன்றும் தீவிரமாக களப் பணியாற்றுபவர். தோழர் சங்கரய்யாவின் 100ஆவது பிறந்த நாளில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தோழர் சங்கரய்யா பெரும் பதவிகளையும், பொறுப்புகளையும் வகிக்கவில்லை என்றாலும், அவரை போன்று மக்களோடு பயணிக்கும் போராளிகளும், தனிமனித இயக்கமும்தான் இன்றைய அரசியலின் தேவையாக இருக்கிறது என்பதில் மறுப்பேதும் இல்லை.
இதையும் படிங்க: 'சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளர்' - சீதாராம் யெச்சூரி