விமானம் மூலம் சென்னை வந்த கோவிஷீல்டு தடுப்பூசி - Covidshield vaccine came to chennai
சென்னை: புனேவில் இருந்து விமானம் மூலம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில் புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 42 பார்சல்களில் சுமார் 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன. இதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இன்று காலை ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.