சென்னை:தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் இன்று (அக். 3) நான்காவது மாபெரும் கரோனா தொற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இந்த மையங்களில் 18 வயதிற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கரோனா தொற்று தடுப்பூசி அளிக்கத் திட்டமிடப்பட்டது.
மாபெரும் முகாமில் இதுவரை
முதலாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில், 28.91 லட்சம் பயனாளிகளுக்கும், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 16.43 லட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 25.04 லட்சம் பயனாளிகளுக்கும் கரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுமார் 15 மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக தடுப்பூசி பணிகள் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், இன்று (அக். 3) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 17,19,544 பயனாளிகளுக்கு கரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.