தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கோவிஷுல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும்.
இதையடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கோவிட் 19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் போட வேண்டும்.
அவர்களுக்கு எப்பொழுது தடுப்பூசி போடப்படும் என்ற விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
முதல் தவணையில் ஒருவருக்கு போடப்படும் அதே தடுப்பூ ஊசி, இரண்டாவது தவணையிலும் போட வேண்டும். தற்போது தடுப்பூசி போடப்படும் மையங்களிலேயே, இரண்டாம் தவணை ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
தடுப்பூசி போடப்பட்டு 28 நாள்கள் முடிந்தவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும். பொது சுகாதாரத் துறை வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கை