சென்னை: தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், “சுகாதாரத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம்அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதிமுதல் கரோனா தீநுண்மி தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 614 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் பிப்ரவரி 26ஆம் தேதிவரை இரண்டு லட்சத்து 91 ஆயிரத்து 158 பேர் முதல் தவணையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்களில் 55 ஆயிரத்து 877 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
காவல் துறையில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 241 நபர்கள் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 38 ஆயிரத்து 759 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதேபோல் முன்களப் பணியாளர்களாக இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 991 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் முதல் தவணை தடுப்பூசி 59 ஆயிரத்து 448 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.