சென்னை:கரோனா தடுப்பூசி ‘மெகா கோவிட் சிறப்பு முகாம்’ வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெறவுள்ளது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள், அரசு சாரா அமைப்பு, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள் (கிராம மற்றும் நகர), கல்வித் துறை, யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, பன்னாட்டு சுழற்சங்கங்கள் கரோனா தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.
முக்கிய அம்சங்கள்
- கரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை செயல்படும்.
- ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
- 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு வரும் 12ஆம் தேதி கரோனா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் AEFI கிட் தயார் நிலையில் வைக்கப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் பணிக்குழு, நுண் திட்டமிடல், மேற்பார்வையாளர் பயிற்சி, தடுப்பூசி பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
- தேவையான IEC ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கரோனா சிறப்பு முகாமில் பாதுகாப்பான முறையில் நடைபெற கரோனா நெறிமுறைகள், வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.
- தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் கட்டாயமாகும்.
- தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது சானிடைசரை உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.
- பெரியவர்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது மற்ற கரோனா தொற்று தொடர்பாக இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது.
- மையங்களில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்துவர வேண்டும்.
- கரோனா தொற்றுப் பரவும் இடர் உள்ள பகுதிகள், தொலைதூரப் பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள், பிற மாநிலங்களுக்கு ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
- பிற இலாகா கலை சார்ந்த வாகனங்கள் இந்த முகாமில் ஈடுபடுத்தப்படும்.
- சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
- அனைத்து மையங்களிலும் போதுமான காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.
- தேவையான தடுப்பூசி, சிரஞ்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- மாநில, மாவட்ட, வட்டார அளவில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மூன்றாவது அலையைத் தவிர்ப்பதற்காக, கரோனா நோயிலிருந்து விடுபடவும், கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறவும் மெகா கோவிட் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்திப் பயன்பெறுமாறு மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: குறைந்துவரும் கரோனா - தடுப்பூசி போடும் பணிகள் மும்முரம்