27 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தைத் தாண்டிய கரோனா! - Corona Virus update in Tamilnadu
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் சுமார் 27 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தைக் கடந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
covid
By
Published : Mar 25, 2021, 9:15 PM IST
மக்கள் நல்வாழ்வுத் துறை மார்ச் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 80 ஆயிரத்து 761 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,770 நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், வங்கதேசம் மற்றும் குஜராத், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என 1,779 கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 192 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 73 ஆயிரத்து 219 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 487 சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் 1,027 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 50 ஆயிரத்து 91 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துமனையில் ஐந்து நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும், பிற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவரும் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 641 என உயர்ந்துள்ளது.