சென்னை:கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டு, கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது பெரும் நோய்த்தொற்றான கரோனா. இத்தொற்றின் பரவல், இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது. நோய்த் தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே, அதாவது 2020 மார்ச் மாதத்தில் இருந்தே தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திலிருந்து முதலில் குறைந்தளவிலான பரிசோதனை மையங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, 69 அரசு பரிசோதனை மையங்கள், 198 தனியார் பரிசோதனை மையங்கள் எனத் தற்போது 267 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மே 18ஆம் தேதி வரையில், 2 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரத்து 956 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்பொழுது கரோனா தொற்றின் 2 ஆவது அலையில், தொற்றை உண்டாக்கும் வைரஸ் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் அதிக நாட்கள் தங்கியிருக்காமல் நேரடியாக நுரையீரலைச் சென்று தாக்குகிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சுயமாக மருத்துவம் பார்த்து விட்டு, நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தப் பின்னர் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இதனால் பரிசோதனையில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய முடிவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அப்போது நோயாளிக்கு உள்ள அறிகுறிகளின் அடிப்படையில் சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தால் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிய முடிகிறது.