தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவிட் தொற்றால் பிரபல பேக் கடை மூடல் - Witco bag showroom

சென்னை: கோவிட் பாதிப்பு, ஊரடங்கால் சென்னையைச் சேர்ந்த பிரபல சில்லறை பை விற்பனை நிறுவனமான விட்கோ தனது கடைகளை மூட முடிவு செய்துள்ளது.

பிரபல பேக் கடை மூடப்பட்டது
பிரபல பேக் கடை மூடப்பட்டது

By

Published : Jun 4, 2021, 3:45 PM IST

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. தொடர் கடை அடைப்பால் வருவாய் இழந்த சென்னையைச் சேர்ந்த 70 ஆண்டு பாரம்பரியமிக்க விட்கோ நிறுவனம் தனது கடைகளை மூடி தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சில்லறை பேக் விற்பனையில் மிகவும் பிரபலமானது.
கடந்த 1951ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கோவை, கொச்சி, கோழிக்கோடு, பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுப்படுத்தியது.

பின்னர் சென்னை பெருநகரமாக வளர்ச்சி பெறும்போது நகரின் நாகரீக அடையாளங்களில் ஒன்றாக இது திகழந்தது. வெளியூர், வெளிநாடு செல்லும் பைகள், பெண்களின் கைப்பைகள், ஆடம்பர பைகள் உள்பட பலதரப்பட்ட பைக்கள், பல நிறுவனங்களின் பைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
கோவிட் தொற்றால் கடந்தாண்டு இந்நிறுவனம் முடக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும், பயணங்கள் குறைந்தது. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள் குறைந்தன.

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செயல்படாதது ஆகியவற்றால் மக்கள் பை வாங்குவது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வியாபாரம் சரிவர இல்லாத நிலையில் தொடர்ந்து நட்டத்தை சமாளிக்க முடியாமல் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள விட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், "எங்களது வணிகத்தை நிறுத்திவிட்டோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது எளிதான முடிவல்ல, இருப்பினும், கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக சர்வதேச பயணம் தடைபட்டுள்ள நிலையில் எங்களால் தொழில் நடத்த இயலவில்லை. எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என எங்களுக்கு 70 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details