தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2022, 7:38 PM IST

ETV Bharat / city

Covid Guidelines: காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்

தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு காவல் துறை தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

covid guidelines for police department officials
காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்

சென்னை:ஊரடங்கு சமயங்களில் பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய, மாநில அரசுத் துறை அலுவலர்கள், ஊழியர்கள், நீதிமன்றம், நீதித் துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அலுவல் காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்வோரை அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவம் - மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு - எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரை அடையாள அட்டையைப் பார்வையிட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்

அதேபோல் உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் உள்ளிட்ட நிறுவன பணியாளர்களையும் அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும் எனவும்,

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட பல்வகை சரக்கு வாகனங்களில் கொண்டுசெல்லப்படும் விவசாய விளைபொருள்களான காய்கறி, பழங்கள், மேலும் இறைச்சி, முட்டை போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தாமல் உடனடியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வரும் 9ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடக்க உள்ளதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல்வேறு நிறுவன வேலைவாய்ப்புக்காக நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளச் செல்வோரைத் தடுக்காமல் உரிய அழைப்புக் கடிதத்தைப் பார்வையிட்டு உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சல் சேவைகளுக்கு அனுமதி

அதேபோல ஞாயிறு முழு ஊரடங்கின்போது உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன பணியாளர்களை அரசால் வழங்கப்பட்டுள்ள நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொந்த - வாடகை வாகனங்களில் விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளையும், அங்கிருந்து வீடுகளுக்குத் திரும்பும் பயணிகளையும் தடுக்காமல் விசாரித்து அனுப்ப வேண்டும் எனவும், கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகள் செல்வதைத் தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோரையும், பணி முடிந்து சொந்த ஊர் திரும்புவோரையும் அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் காவல் துறையினர் பின்பற்ற வேண்டியவை

மேலும், இரவு நேர ஊரடங்கு வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடன் காவல் துறையினர் நடந்துகொள்ள வேண்டும்.

வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் காவலர்கள் கையுறை அணிந்து சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும், அடிக்கடி காவல் துறையினர் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரவு வாகன சோதனையை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டுமெனவும், காவலர்கள் தடுப்புகள் அமைத்து ஒளிரும் மேல் சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பின் மூலம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details