சென்னை ஆலந்தூர் 26ஆவது கரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மார்ச் 26) தொடங்கிவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழ்நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். தமிழ்நாடு முழுவதும் இன்று 26ஆவது தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 3.90 கோடி பேர் தடுப்பூசி செலுத்திகொள்ளவில்லை. அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் 12-14 வயதுடையவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 51.4 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 15-18 வயதுடையவர்கள் 28.58 பேர் உள்ளனர். இவர்களில் 85.44 விழுக்காட்டினருக்கு முதல் தவணையும், 60.90 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92.10 விழுக்காட்டினருக்கு முதல் தவணையும், 75.50 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 99 விழுக்காடு மக்களுக்கு முதல் தவணையும், 81 விழுக்காடு மக்களுக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் 27 நகராட்சிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 16,19,145 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்கள். இவர்களில் 7.52 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை. அண்டை நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவ வல்லுநர்கள் நாட்டில் ஜூன் மாதம் 4ஆவது அலை வரலாம் என்று தெரிவித்துவருகின்றனர். அதனை தடுக்க அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் த.மோ அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து விபத்து... தந்தை, மகள் உயிரிழப்பு...