தமிழ்நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுபவர்கள் 108 அல்லது 104 எண்ற எண்ணில் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் முடிந்தது. இந்நிலையில், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரப்பி வந்தன.
இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, பிற துறைகள் மற்றும் இயக்குநரகங்களுடன் இணைந்து, தமிழ்நாடு தேசிய நல்வாழ்வுக்குழு அலுவலகத்தில் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் சிறப்பம்சங்கள் இந்தக் கட்டளை மையத்தின் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தி தரப்படுகிறது.
இந்த மையத்தின் செயல்பாடு தொடர்பாக மருத்துவர் கணேஷ் கூறுகையில், "கோவிட் கட்டளை மையத்திற்கு 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அழைக்கும் நபர்களுக்குத் தேவையானவர்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம். மேலும் சிலர் தங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் பதற்றத்தில் தொடர்பு கொள்கின்றனர்.
அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை வழங்குகிறோம். மேலும் சிலர் தங்களுக்கான படுக்கை வசதிகளை முன்கூட்டியே பெற்று விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கையை பெற்றுத் தருகிறோம்" என்றார்.