சென்னை:Covid 19 case increases in Chennai:அசோக் நகர் காலனியில், ஒரே தெருவைச் சேர்ந்த 10 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று ஓரிரு நாள்களாக அதிகரித்து வருகிறது. சென்னையிலும் தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரே தெருவைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா
அசோக் நகர் காலனியில் ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தெருவைச் சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். அவருக்குப் பின் அடுத்தடுத்த தொற்று ஏற்பட்டுள்ளதால், இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.
மேலும், சென்னையில் நேற்று 194 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 200-க்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை 17ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் 50ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.
புதிய கரோனா சிகிச்சை மையங்கள்
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை, நந்தம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் மீண்டும் கரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும்.
இந்தச் சூழ்நிலையில், சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதைப் பொறுத்தவரை முதல் தவணை 86 விழுக்காடும், இரண்டாம் தவணை 58 விழுக்காடும் செலுத்தி உள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட கரோனா
மேலும் 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குத் தகுதி உள்ளவர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.