சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சுரேஷ்குமார், ” பச்சையப்பன் அறக்கட்டளையின் மாற்றம் செய்யப்பட்ட விதி அடிப்படையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவர் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்.
மேலும், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவற்றை ’முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்படுகிறது. குத்தகை எடுத்த நிறுவனம் அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் ” எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.