சென்னை: மந்தைவெளியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்களை வெளியேற்ற இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது. இதற்காக வீடுகளை காலி செய்யும்படி, குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், குடியிருப்புகளில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள நிலையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் குடியிருப்புவாசிகளை அகற்றுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மந்தைவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்களை அக்டோபர் 13ஆம் தேதிவரை வெளியேற்ற இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி குடிசை மாற்று வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதனிடையே, குடியிருப்பை காலிசெய்ய எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.