சென்னை:முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்குச் செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு தடைவிதிக்கக் கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்குச் செலுத்தப்படும் தொகைக்குப் பணம் கையாளுவதற்கான கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கருவூல இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்குப் பதிலளிக்காத வங்கி அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு அலுவலர்களின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதேபோல இந்த வழக்கில் வங்கி சார்பில் பதில் மனு தாக்கல்செய்த அலுவலர்கள், மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.