சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அளித்த மனு பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக்கோரி அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல்செய்திருந்தார்.
சட்டப்பேரவையில் தீர்மானம்
அதில், 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கேட்டு கடந்த மே, ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாடு உள் துறைச் செயலருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, நளினியின் தாயாரது மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க ஏதுவாக வழக்கைத் தள்ளிவைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி