சென்னை:காவல் துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது ஊர்க்காவல் படை. இதில், பணிபுரிபவர்களுக்கு ஐந்து நாள்கள் பணி நாளாக நிர்ணயித்து, நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியம் வழங்க 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஊர்க்காவல் படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாள்களை மட்டும் 10 நாள்களாக அதிகரித்து, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். நான்கு மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதையும் அம்மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஊதிய உயர்வு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அண்ணாமலை தரப்பில், ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்து 600 ரூபாய் மட்டுமே ஊர்க்காவல் படையினருக்கு கிடைப்பதாகவும், 17ஆயிரத்து 600 ஊர்க்காவல் படையினரில் 76 விழுக்காட்டினர் பட்டியலின பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களைப் போல தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்குப் பணி நாள்களையோ அல்லது ஊதியத்தையோ உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.