மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் இருவர், ஒருபால் ஈர்ப்பாளர்களாக பழகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதையறிந்த அவர்களின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”மனுதாரரின் பெற்றோரிடம் சமாதானம் செய்யும் நீதிமன்றத்தின் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மனுதாரர் மற்றும் அவர்களின் பெற்றோர் தரப்பில் உடன்பாடு ஏற்படுத்தும் வகையில் சமரச மையத்தில் நிபுணர்கள் முன்னிலையில் நேருக்கு நேர் இருவரையும் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே பாலினத்தவர்கள் சேர்ந்து வாழ்வது தொடர்பான இந்த வழக்கில், உலகம் முழுவதும் என்ன தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். மனுதாரர் மற்றும் அவர்களது பெற்றோரின் கருத்துகளை விவரமாக தீர்ப்பில் சேர்க்க வேண்டும் என்பதால், விரைந்து தீர்ப்பு வழங்கும் தனது முடிவை மாற்றியுள்ளேன்.