அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா 2018ஆம் ஆண்டு நியமனம்செய்யப்பட்டார். அவருக்கும் அப்போதைய அதிமுக தரப்பிற்கும் தொடர்ந்து பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுவந்தன. இதற்கிடையில் அவர் மீது சுமார் 250 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு புகார்கள் சுமத்தப்பட்டன.
எனவே அது குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் இந்தக் குழு சூரப்பா மீதான முறைகேடு வழக்கு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவையும் வெளியிடப்பட்டன.
நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் பல்வேறு புகார்கள் பெறப்பட்ட நிலையில் புகார் கொடுத்தவர்கள் அனைவரும் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர். அதேபோல அண்ணா பல்கலைக்கழக அலுவலர்கள், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரும் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் சூரப்பா கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றுவிட்டதால் தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்குப் பதில் என்ன என்று அழைப்பாணை அனுப்பி சூரப்பாவிடமும் விளக்கம் கேட்டுப் பெறப்பட்டது. முழுமையான விசாரணை மே மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் இருந்தது.
சூரப்பா மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு உரிய முகாந்திரம் இருப்பதாகவும் அது விசாரணையில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அது தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் சமர்ப்பித்தார்.
இதையும் படிங்க: நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!