மத்திய அரசு தனது கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி அல்லாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மூன்று பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னதாக இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
இந்தி கட்டாயம் என்ற நிபந்தனை நீக்கம் - வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம்! - national education draft
சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை படிக்க வேண்டியது கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்கி மத்திய அரசு வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது.
முன்னதாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான தேசிய கல்விக் கொள்கை குழுவின் பரிந்துரையின்படி மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் என்று வரைவு அறிக்கையை மத்திய அரசு ஜுன் 1ஆம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவரும் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும், இந்தியை கட்டாயமாக்கக் கூடாது, அதை உறுதி செய்யும் வகையில் வரைவு அறிக்கையை மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். இதனையடுத்து, மத்திய அரசு பணிந்துள்ளது.