சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரிக்கப்பட்டு பெறப்படுகிறது.
குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டுசெல்லப்படும் குப்பைகளின் அளவை குறைக்கும் வகையில், நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்கள், உயிரி எரிவாயு மையங்கள், தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்கள், உலர்க்கழிவுகளை தனியாக பிரித்தெடுக்கும் பொருள்களை மீட்டெடுக்கும் மையங்கள் மற்றும் நெகிழி, உலோகப் பொருள்களை தனியாகப் பிரித்து மறுசுழற்சியாளர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை அவற்றின் முழு திறன் அளவிற்கு பயன்படுத்தி குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயர் அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்: அதன்படி 15 மண்டலங்களிலும் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் கழிவுகள், மாநகராட்சியின் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.