கரோனா பரவலையடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்து அறிவுரைகள் வழங்கிவருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்களில் சிலர் கரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வெளியிடங்களில் சாதாரணமாகச் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் என மூன்று பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஆனாலும், வைரசின் வீரியம் தெரியாமல் பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூட்டம் கூட்டமாகச் சாலையில் நடமாடிவருகின்றனர்.
எனவே அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ’போரா கண் மருத்துவமனை’ சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் கூடிய பிரமாண்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம், பழைய ராணுவ சாலையில் வரையப்பட்டுள்ளது. இந்தச் சாலை பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் சாலையாக இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் இந்த ஓவியம் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யா, ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். பொதுமக்கள் வைரசின் கொடும் வீரியத்தை அறிந்துகொள்ள இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்வேறு இடங்களில் ஓவியங்கள் வரையப்பட உள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கரோனா: ஆவடியில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம்! இதையும் படிங்க: கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்