சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தொடங்கிய நாளிலிருந்து இதுவரையிலும் மொத்தமாக இரண்டு கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 485 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில் 28 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11லட்சத்து 54 ஆயிரத்து 77 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் தடுப்பூசி மையங்களில் காத்திருந்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக பொது சுகாதாரத் துறை சார்பாக நாளை (ஆக.07) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து சுகாதாரத் துணை இயக்குநர்களும் அரசு மருத்துவமனைகளில் வழக்கமாக கரோனா முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.