தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”21,000 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழக சுகாதாரத்துறையை மனம் திறந்து பாராட்டினார். கரோனா காலத்தில் தமிழகத்தில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அவர் கூறியது பெருமையாக உள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது அலை வரக்கூடாது என்பதற்கான அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, சுகாதாரத்துறை மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம், பணி நிமித்தமாக வந்து 72 மணி நேரம் வரை இருப்பவர்களுக்கு எந்த பரிசோதனையும் தேவையில்லை. அதே நேரம், தொடர்ந்து தங்கி இருந்தால், அவர்கள் ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்குரிய வழிகாட்டுதல்களை வழங்கும்.