தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் மாதம் 7ஆம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களை நோயில் இருந்து காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேரவை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு திட்ட இயக்குநர் அனுப்பிய கடிதத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் மருத்துவமனைகளில் 25 விழுக்காடு படுக்கைகள் கோவிட்-19 சிசிக்கைக்கு பயன்படுத்த வேண்டும் என கூறினார். மேலும், அதை செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் எவ்வளவு கட்டணம் செலுத்தப்படும் என்பது குறித்து அதில் கூறப்படவில்லை.
தமிழ்நாடு அரசு அறிவித்தாலும், கட்டணம் தொடர்பாக விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடவில்லை. இதனால், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் யாருக்கும் கரோனா சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டண விவரத்தை நிர்ணயம் செய்து ஜூன் 5ஆம் தேதி தான் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டது. அதில், தனியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கட்டணமாகவும், ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் இல்லாமல் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் வரையும், வென்டிலேட்டருடன் 14 ஆயிரமும், அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்.