ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்குவது மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 650 குடிசைப் பகுதிகளில் வாழும் சுமார் 26 லட்சம் மக்களுக்கு மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணியை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் கண்ணகி நகரில் தொடங்கி வைத்தார்.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள சுனாமி நகர், கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஒவ்வொருவருக்கும் முகக்கவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டன. பின்னர் அங்குள்ள மக்களிடையே, தனி மனித இடைவெளி, கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற அறிவுறுத்தல்களை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.