தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழா, அதன் வெள்ளி விழா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, ”இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோரில் 70% பெண்கள் எனும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா குறைவான இறப்பு விகிதமே பதிவாகியுள்ளது. நமக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் கரோனா நோய் தடுப்பு மருந்தை இந்தியா தயாரித்து வருகிறது. மருத்துவம் குறித்து வள்ளுவர் குறிப்பிட்டது போல, கரோனோ காலத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியோடு போராடிய வீரர்கள் போல செயல்பட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளில் 30,000 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் மருத்துவ உயர்படிப்புகளுக்கான இடங்களும், கடந்த 2014 ஆம் ஆண்டவிட 80 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், பிரதமரின் சுயசார்பு திட்டம் மூலம் சுகாதாரப்பணிக்காக 62,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.
’நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்' இந்த விழாவில் மருத்துவப்படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் 2,128 பேர், இளநிலை படித்தவர்கள் 3,960 பேர், பல் மருத்துவம் படித்த 534 பேர், இந்திய மருத்துவம் படித்த 1,297 பேர், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள் பயின்ற 13,938 பேர் என மொத்தமாக 21,889 பேர் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையும் படிங்க:விலை சரிவால் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி!