சென்னை: கரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லியில் ஏப்ரல் 4 ந் தேதி 82 பேருக்கு இருந்த கரோனா பாதிப்பு 19 ந் தேதி 632 என 5 மடங்கு அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மாற்றமின்றி குறைந்து வரும் கரோனா பாதிப்பு 8 மாவட்டங்களில் 25 முதல் 30 வரையில் ஒரு சில இடங்களில் பதிவாகி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் , பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்: பொது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கும், மருத்துவமனை போன்றவற்றுக்குச் செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 40 லட்சம் பேரும், 2ம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 37 லட்சம் பேரும் போட்டுக்கொள்ளவில்லை. மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களும் போட்டுக் கொள்ள வேண்டும்.