சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 எனும் கரோனா நோய்த் தொற்று உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இன்று (ஜூன் 12) நிலவரப்படி, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவிய நிலையில், இதனால் எட்டாயிரத்து 400 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை பார்க்கலாம்...
கேள்வி: இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் எவ்வாறு உள்ளது? அதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் 10 முதல் 15ஆம் தேதிகளில் உச்சத்தைத் தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கொஞ்சம் மாறுபடும். அங்கு இருக்கக்கூடிய சூழல், மக்கள்தொகை, மக்கள் தொகை நெருக்கம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொஞ்சம் மாறுபடும். ஆனால் மொத்தத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் உச்சத்துக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோய்த் தொற்றின் தன்மை தற்போது ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இதை நாம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது.
தற்போது, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறங்கு முகம் தொடங்கியுள்ளது. அங்கு இறங்கு முகம் தொடங்கியதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை அங்கு ஒரு நாட்டில் மக்கள் தொகையாக இருக்கிறது. மக்கள்தொகையில் 50 முதல் 60 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டு உச்சத்துக்கு செல்லும் பொழுது தான் இறங்க ஆரம்பிக்கும். அங்கு மக்கள் தொகை குறைவாக இருக்கும் பொழுது அதை வைத்து நாம் ஒப்பீடு செய்ய முடியாது.
இந்தியாவில் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு குடும்பமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து நோயைக் கட்டுப்படுத்துவது என்பது ஒருபுறம். ஆனால், அதே நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்தாலும் நாம் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அது சரிவராது.
பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மூன்றாகப் பிரிக்கலாம்... அதன்படி,அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வெளியில் எங்கு சென்றாலும் கட்டாயமாக கவசத்தை அணிய வேண்டும். முக்கியமாக பேசும்பொழுது முகக் கவசத்தை கழட்டக்கூடாது. ஆனால், சிலர் அருகில் இருப்பவர்களுடன் பேசுகிறேன் என முகக் கவசத்தை கழட்டுகின்றனர். பேசும் போதும், இருமும் போதும், தும்மும் போதும் வைரஸ்கள் வெளியில் வரும். எனவே, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வரக்கூடாது என விரும்பினால் முகக் கவசம் அணிய வேண்டும்.
அவ்வாறு கூறினால் நீங்கள் நோயாளியா என நினைக்க வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் நோயாளி என எண்ணிக் கொள்வோம். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு செல்லக் கூடாது எனவும் அவரிடமிருந்து தனக்கு வரக்கூடாது எனவும் எண்ணிக்கொள்ள வேண்டும். நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்றுவதற்கு முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
வீட்டில் இருக்கும்போது முகக் கவசம் அணிய தேவையில்லை. வீட்டுக்கு யார் வந்தாலும் நாம் முதலில் முகக் கவசம் அணிய வேண்டும். இது போன்ற சிறிய நடைமுறைகளை வரையறை செய்து அளிக்க வேண்டியதில்லை. வெளியில் சென்ற பின், வீட்டுக்கு வரும் முன்னர் கைகளை கழுவ வேண்டும். துணிகளை சோப்பு நீரில் ஊற வைத்து துவைக்கலாம். தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இரு நபர்களுக்கு இடையில் குறைந்தது 6 அடி இடைவெளி வேண்டும். தகுந்த இடைவெளியை வீட்டில் கடைபிடிக்க முடியாவிட்டாலும் வெளியில் கடைபிடிக்க வேண்டும்.
அலுவலகத்தில், அதிகாரிகள் அழைத்தால் நாம் இடைவெளி விட்டு பேச வேண்டும். கடைக்குச் செல்லும் பொழுது கடைக்குள் ஏற்கனவே மூன்று நபர்கள் இருந்தால் சிறிது காத்திருந்து சென்று பொருள்களை பெறலாம். முக்கியமாக, சாலைகளில் சிக்னலில் வாகனங்கள் காத்திருக்கும் பொழுது பக்கத்தில் நிற்கின்றனர். கரோனா வைரஸ் தொற்று 15 நிமிடங்கள் பக்கத்தில் இருந்தால்தான் வரும் என்பது ஒரு வரையறை. ஆனால், சிக்னலுக்கு நாம் நிற்கும் பொழுது அங்கு இருக்கும் ஒருவருக்கு எதேச்சையாக தும்பல் வந்தால் அவர் தும்பதான் செய்வார். அவருக்கு பக்கத்தில் நாம் இருந்தால் நமக்கு வருவதற்கான ஆபத்து உள்ளது. எனவே, சிக்னலில் காத்திருக்கும்போது இரண்டு அடி தள்ளி நிற்கலாம். இதுபோன்ற சிறிய கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்கலாம்.
நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களையும் அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த வேண்டும். வீடுகளிலும் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் போன்றவற்றை கடைபிடித்தால் கண்டிப்பாக நம்மை தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
கேள்வி: பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதும் சரியானதா?
பதில்:பள்ளிக்கூடங்கள் திறப்பது என்பதை உடனடியாக செய்ய முடியாது. பள்ளிகளில் மாணவர்கள் அருகருகே அமருவார்கள். அனைத்துப் பள்ளிகளிலும் இடைவெளியை அளிக்க முடியாது. மாணவர்களை அருகருகே அமர வைத்து பாடம் நடத்த முடியாது. பள்ளி, கல்லூரிகளை திறக்க கொஞ்ச நாள்கள் ஆகும். அதற்கு அனைத்து இடங்களிலும் இருந்து தகவல்கள் வர வேண்டும். பிற மாநிலம், மாவட்டங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அலுவலர்கள் முடிவெடுப்பார்கள்.
ஆன்லைன் வகுப்புகள் என்பது மாணவர்கள் படிப்பை மறந்து வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதற்காக நடத்தப்படுவது. ஆன்லைன் வகுப்பு ஓரளவுக்கு தான் நடத்த வேண்டும். ஏனென்றால் எப்போதும் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மொபைல் என இல்லாமல் இருக்க வேண்டும். இதிலும் கண் பாதிப்பு போன்ற வேறு உபாதைகள் தோன்றலாம். ஆன்லைன் வகுப்பால் கண் பாதிப்பு என யாரும் கூற முடியாது. நான் தற்பொழுது ஆறு மாத குழந்தைக்கு கையில் செல்போன் கொடுத்து அதில் படத்தை காட்டி உணவு ஊட்டும் போது கண் பாதிப்பு ஏற்படாதா? அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் சோர்வடைந்து விடாமல் இருப்பதற்கு ஆன்லைன் வகுப்புகள் அளவுடன் பயன்படுத்தினால் பிரச்னை இல்லை.
கேள்வி: கரோனா வைரஸ் தாக்கம் இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?
பதில்:கரோனா வைரஸ் தற்போது வெளியே போகப் போவதில்லை. தற்போது உலகில் பல வல்லுநர்கள் நினைப்பது இன்னும் சில ஆண்டுகள் இந்த வைரஸ் இருக்கும். இதன் தாக்கும் வேண்டுமானால் குறையும். டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் தற்போது உள்ள தாக்கம் உலகின் அனைத்துப் பகுதியிலும் குறைந்துவிடும். அதன்பின்னர் அங்கங்கு சில இடங்களில் இருக்கலாம்.
தற்போது ஜூன், ஜூலை மாதங்களில் ப்ளூ சீசன் வருவதுபோல் வரலாம். இந்த நோய் எப்படி இருக்கும் என்பது தடுப்பு மருந்துகள் வருவதை பொறுத்துதான் கூறமுடியும். தடுப்பு மருந்துகள் வந்துவிட்டால் நோயின் தாக்கத்தை முற்றிலுமாக குறைத்துவிடலாம். மருந்துகள் வந்துவிட்டாலும் நோயின் தாக்கத்தை குறைத்துவிடலாம். நோய் தாக்கம் அதிகரிக்குமா அல்லது வைரஸ் நிலையிலிருந்து மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.