மீன்வளத்துறையில் பணியாற்றிய போது இறந்தவர்களின் வாரிசுகள் 7 பேருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருந்தது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கக்கூடிய கட்சிகளோடுதான் கூட்டணி அமைக்கப்படும்.
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது கானல் நீராகவே இருக்கும். இதனை ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரர் அழகிரியே தற்போது தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளை நிராகரித்துவிட்டு, தனது மகன் உதயநிதியை மட்டுமே ஸ்டாலின் உயர்த்த பார்க்கிறார். மேலும், கிராம சபையை குண்டர் சபையாக அவர் மாற்றியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதாக மு.க.அழகிரி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.