சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறை குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களிம் பேசிய அவர், "லண்டனில் இருந்து சென்னை வந்த தினேஷ் என்பவருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தற்பொழுது உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.
ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு
நவம்பர் 25 ஆம் தேதி முதல் இன்று வரை வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த 2390 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், லண்டனில் இருந்து வந்த மதுரையைச் சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த 1 நபர், தஞ்சாவூரைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த தினேஷையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியாக சிகிச்சை
இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற கரோனா நோயாளிகளுடன் சேர்த்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. விமானம் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்த நோயாளிகளை, மாவட்ட வாரியாக சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித வித்தியாசமான அறிகுறிகளும் இல்லை. அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது.
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டும்
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, மக்கள் பதட்டம் அடையாமல், நோய் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தடுப்பூசி பணிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் நல்ல பலனை தருகிறது. இருப்பினும் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் பொது மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 70,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தோராயமாக ஒரு நாளில் 1000 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
தொற்று குறைந்துள்ளது
சென்னையை பொறுத்த வரை நாள் ஒன்றுக்கு 300 நபர்கள் மட்டுமே கரோனா தொற்றுக்கு ஆட்படுகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில், கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதனை முழுமையாக கடைப்பிடித்த பகுதிகளில் தற்பொழுது நோய் தொற்று குறைந்துள்ளது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில் பொதுமக்களின் பங்கு சற்று குறைந்துள்ளது. ஆகையால் தொற்று வராமல் பொதுமக்கள் விழிப்புடன் இருத்தல் அவசியம். பொது சுகாதார அமைப்பின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் கட்டுப்பட வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: லண்டனிலிருந்து மதுரை வந்த பயணிக்கு கரோனா!