சென்னையில் கரோனா காலடி எடுத்து வைத்த முக்கிய இடங்களாக கோயம்பேடு சந்தை, டிஜிபி அலுவலகம், பள்ளிக்கல்வி இயக்ககம் போன்றவை பார்க்கப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தையே ஆளும் தலைமைச் செயலகத்திலும் கடந்த சில நாள்களாக தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு பணிபுரியும் 80க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், அங்கு தினமும் வரும் அமைச்சர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.
மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் ஒன்பதாவது மாடியில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் அவரது உதவியாளர்கள், இரண்டாவது மாடியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கும் கரோனா பரவியுள்ளது. மேலும், சமூகநலத் துறை, பொதுப்பணித் துறை, வணிகவரித் துறை, முதலமைச்சரின் செயலாளர் பிரிவு, நிதித்துறை, கல்வித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தலைமைச் செயலகப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன.
தலைமைச் செயலக பணியாளர்கள் தலைமைச் செயலக வளாகத்தில், தெர்மல் மானிட்டர் மூலம் உடல் வெப்ப நிலையை சோதித்தப் பின்னரே ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வெப்பநிலை அதிகமாக இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மின் தூக்கி உள்ளிட்ட இடங்களிலும் தனி மனித இடைவெளி போன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், நாள்தோறும் அங்கு கரோனா பரவி வருவது பணியாளர்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. இதனால் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கோட்டை பக்கமே வருவதில்லை என்று கூறப்படுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள மின்தூக்கி இது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இரு முறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா மேலும் பரவாமல் தடுக்க தற்போது இருக்கும் 50% பணியாளர்களை 33% பணியாளர்களாக குறைக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது தொற்றின் தாக்கம் தலைமைச் செயலகத்தில் அதிகரித்து வருவதால், உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், நோயுற்றோர் உள்ளிட்டோருக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் 6,000 பணியாளர்கள் உள்ள நிலையில், அதை 33% என்ற அடிப்படையில் பணிக்கு அமர்த்தினால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்கள், சிகிச்சை கொள்ளும் காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தோணிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தலைமைச் செயலக சங்க அலுவலகம் சென்னையில் இரண்டாம் அலை கரோனா தாக்கம் கோயம்பேட்டிலிருந்து தொடங்கிற்று என்று கூறிய நிலை மாறி, தலைமைச் செயலகத்திலிருந்தும் தொடங்கிற்று என்று கூறும் நிலை வந்தாலும் மறுப்பதற்கில்லை என்று அங்கு பணிபுறியும் பெயர் குறிப்பிட விரும்பாத சிலப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். காப்பாற்றுவது ஒருபுறம் இருந்தாலும், காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறவே நமக்குத் தோன்றுகிறது.
கோயம்பேடு போன்ற அடுத்த ’ஹாட் ஸ்பாட்’ தலைமைச் செயலகமா? இதையும் படிங்க: தாயகம் திரும்பிய தமிழர்கள் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்ய விவரம் வெளியீடு