தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழ்நாட்டு அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 10, 2019, 10:06 AM IST

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி பராமரிக்காததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக் காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

மேலும், ஏப்ரல் 23ஆம் தேதி நேரில் ஆஜராக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (IASE), நீரி (NEERI) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து, தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு எதிராக தமிழ்நாட்டு பொதுப்பணித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும், ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தம்ழிநாட்டு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details