சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்றவேண்டும் என சர்ச்சையான வகையில் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் கனல் கண்ணன் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கனல் கண்ணனை தேடி வருகின்றனர்.
இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல தரப்பு கருத்து மோதல்கள் மற்றும் சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில், சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரியார் சிலை குறித்து சர்ச்சையான வகையில் கருத்து வெளியிட்டதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாகவும் பிருங்கி மலை கோபால் என்பவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த சையது அலி என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்து விசாரித்த போது, S.J.கோபால் மவுண்ட் கோபால் (எ) சிவனடியார் கோபால் (எ) பிருங்கி மலை கோபால் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சையான வகையில் பதிவிட்டு இருந்ததும், ஒரு பிரிவினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததும் தெரியவந்தது.