சக்கர நாற்காலி:
பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், "நான் சக்கர நாற்காலியில் அமர்ந்து யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன்" என்று கூறினார். இந்தப் பேச்சில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியைதான் கமல் விமர்சனம் செய்கிறார் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிவந்தனர். இது பற்றி செய்தியாளர்களை கேள்வி எழுப்பிய போது "நான் என்னுடைய முதுமை பற்றி மட்டுமே பேசினேன்" என்றார். இருப்பினும் அந்த பேச்சுக்காக நெட்டிசன்களால் கமல் வறுத்தெடுக்கப்பட்டார்.
ட்விட்டர் போர்:
சர்க்கர நாற்காலி என்ற சொல்லாடலை பயன்படுத்தியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் ட்விட்டர் வலியுறுத்தி வந்தனர். ‘மன்னிப்பு கேள் கமல்’ என்ற ஹேஸ்டேக்கில் திமுக ஆதரவாளர்கள் பதிவு செய்ய, ’மன்னிப்பாவது மயிராவது’ என கமல் ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்தனர்.
பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சர்க்கர நாற்காலி பேச்சு குறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கருணாநிதியின் சர்க்கர நாற்காலியை பிடித்து தள்ளுவதில் நானும் ஒருவன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீண்டும் சர்ச்சை: தனிமனித தாக்குதல்!
மார்ச் 8 தேதி மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்த ஒரு விழாவில் பேசிய கமல்ஹாசன் , "நான் கருணாநிதியை அவமானப்படுத்தியதாக கூறுகிறார்கள், உண்மையாக கருணாநிதியை அவமானமப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும்" என்று கூறினார்.
கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என கூறுகிறீர்களே இது தனிமனித தாக்குதல் இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல்ஹாசன், சக்கர நாற்காலி குறித்து நான் பேசிய கருத்தை அவமானப்படுத்தியதாக சொன்னார்கள். அதனால் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால் இப்படியும் சொல்லலாம் என நான் சொன்னேன். தனிமனித தாக்குதல் இல்லாமல் யார் அரசியல் செய்கிறார்கள் என பதிலளித்து சர்ச்சையில் சிக்கினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர் சீனிவாசன், காமராஜர், அண்ணா காலம் முதல் கலைஞர், ஜெயலலிதா காலம் வரை அரசியலில் தனிமனித தாக்குதல் அதிகமாக இருந்தது. ஆனால், மாற்று அரசியல் பேசும் கமல் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டது தவறு, கமல்ஹாசன் வருகிற நாட்களில் இதுபோல் தனிமனித தாக்குதலில் ஈடுபடக்கூடாது. தனிமனித தாக்குதல் குறித்து கமல் இந்த மாதிரியான கருத்தை பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
மேலும் அவர், இடஒதிக்கீடு விவகாரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்காமல் எப்படி வன்னியர்களுக்கு இடஒதிக்கீடு அளிக்கப்பட்ட்டது, எல்லாம் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என கமல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார். வன்னிய இடஒதுக்கீட்டை எந்தக் கட்சியுமே சரி, தவறு என்று சொல்லவில்லை. வாக்கு வங்கியை மனதில் வைத்து யாரும் அதில் பெரிதாக கருத்து கூறவில்லை என்றார்.
கமலின் மொழி குறித்து சீனிவாசனிடம் கேட்டதற்கு, அவரது மொழி சில நேரங்களில் சாமானிய மக்களுக்கு புரிவதற்கு கடினமாக உள்ளது. ஆனால் நகர்ப்புற மக்களுக்கு புரிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு அதிக வாக்கு கிடைக்கும் இடம் நகர்ப்புறம்தான். அதனால் வருகிற தேர்தலில் அவர் சில இடங்களில் 10 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை பெறுவார். 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
கமலின் மாற்று என்பது ‘ஏமாற்று’ கமல்ஹாசனின் மாற்று அரசியல் குறித்து அரசியல் நோக்கர் இளங்கோவன் நம்மிடம் பேசியபோது, ”மாற்று அரசியல் தர விரும்பினால் எந்த மாதிரியான மாற்று என்பதில் தெளிவு இருக்கவேண்டும். ஆனால், கமல்ஹாசனிடம் தெளிவு என்ற ஒன்று இல்லை. அதேபோல் கட்சி நடத்துவதிலும் தெளிவில்லாமல் இருக்கிறார். இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மக்கள் பிரச்னை விவகாரத்தில் பதில் சொல்லாமல் நழுவி வருகிறார். இந்திய அரசியல் அமைப்பில் இட ஒதுக்கீடு பற்றி விவரங்கள் உள்ளது. அதை எதையும் படிக்காமல் ஓய்வு நேரங்கள் அல்லது சினிமா படவாய்ப்பு இல்லாத நேரங்களில் அரசியலுக்கு வந்து செல்கிறார். அவரது அரசியல் அவ்வாறாகவே உள்ளது. இதனால்தான் மாற்று அரசியலை அவரால் விதைக்க கூட முடியவில்லை. சில இடங்களில் அவருக்குத் தெரியாத ஒன்றை மறைப்பதற்கு புரியாமல் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் " என தெரிவித்தார்